சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உத்தரகன்னடாவில் கட்ட திட்டம்
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உத்தரகன்னடாவில் கட்ட திட்டம்
ADDED : மே 11, 2024 06:51 AM
உத்தரகன்னடா: உத்தரகன்னடா மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட, பங்காரமக்கி மஹா சமஸ்தான மடம் முடிவு செய்துள்ளது.
உத்தரகன்னடாவில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தேவை என்பது, மக்களின் நீண்ட நாள் கனவாகும். மாவட்டத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும்படி, பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்த பின் மறந்துவிடுகின்றனர்.
இந்நிலையில் மக்களின் வசதிக்காக, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட, ஹொன்னாவராவின் கேருகொப்பாவில் உள்ள பங்காரமக்கி மஹா சமஸ்தான மடம் முடிவு செய்துள்ளது.
அள்ளங்கி கிராமத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட, நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளில், மருத்துவமனையை கட்டி முடித்து, பொதுமக்களின் சேவைக்கு திறந்துவைக்க மடம் திட்டமிட்டுள்ளது.
உத்தரகன்னடாவில் இதுவரை அரசு சார்பில், ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கூட கட்டவில்லை. விபத்தில் காயமடைந்தோர், நோயாளிகள் சிகிச்சைக்காக உடுப்பி, மங்களூரு, ஷிவமொகா, ஹூப்பள்ளி, கோவா மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.
இதை உணர்ந்த பங்காரமக்கி மஹா சமஸ்தானம், மருத்துவமனை கட்ட முன்வந்துள்ளதை பலரும் பாராட்டினர்.