பி.எம்.டி.சி.,க்கு சொத்து வரி விலக்கு? பெங்களூரு மாநகராட்சி எதிர்ப்பு!
பி.எம்.டி.சி.,க்கு சொத்து வரி விலக்கு? பெங்களூரு மாநகராட்சி எதிர்ப்பு!
ADDED : ஆக 19, 2024 10:43 PM
பெங்களூரு:
பி.எம்.டி.சி., உட்பட அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்க, பெங்களூரு மாநகராட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசின் ஆலோசனையால், மாநகராட்சிக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
பெங்களூரு மக்களுக்கு பி.எம்.டி.சி., போக்குவரத்து சேவை வழங்குகிறது. பயணியரின் வேண்டுகோளுக்கு இணங்கி, புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்குகிறது.
டீசல் விலை, பஸ்களின் உதிரி பாகங்களின் விலை உயர்வு, ஊழியர்களின் ஊதிய உயர்வு என பல காரணங்களால் பொருளாதார நெருக்கடியில் திணறுகிறது.
தற்போது பி.எம்.டி.சி., நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அரசின் உத்தரவுபடி, 'சக்தி' திட்டத்தின் கீழ், பஸ்களில் பெண்கள்இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பி.எம்.டி.சி.,யின் நஷ்டம் அதிகரித்துள்ளது.
எனவே பெங்களூரு மெட்ரோ நிறுவனத்துக்கு அளிப்பது போன்று, பி.எம்.டி.சி.,க்கும் சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கும்படி, நகர வளர்ச்சித் துறையிடம் பி.எம்.டி.சி., வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கு, பெங்களூரு மாநகராட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநகராட்சி சட்டத்தின்படி, குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்களிக்க அனுமதி இல்லை.
ஒருவேளை, மாநில அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து, பி.எம்.டி.சி., உட்பட, அரசின் மற்ற போக்குவரத்துக் கழகங்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளித்தால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் 1,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சொத்து வரியே, பெங்களூரு மாநகராட்சியின் முக்கியமான வருவாயாகும். எனவே, பி.எம்.டி.சி.,யின் கோரிக்கையை நிராகரிக்கும்படி, அரசிடம் வேண்டுகோள் விடுக்க, பெங்களூரு மாநகராட்சியின் வருவாய் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

