கட்சி பிரமுகரை கிண்டல் செய்த அமைச்சருக்கு எதிர்ப்பு
கட்சி பிரமுகரை கிண்டல் செய்த அமைச்சருக்கு எதிர்ப்பு
ADDED : மார் 28, 2024 10:43 PM

ஹாசன் : கட்சிக் கூட்டத்தில் நக்கலாக பேசிய, அமைச்சர் ராஜண்ணாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் சித்தராமையா இன்று ஹாசனில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஹாசனில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஹாசன் காங்கிரஸ் அலுவலக வளாகத்தில், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜண்ணா பேசுகையில், “ஹாசனில் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, எட்டு சட்டசபை தொகுதிகளிலும், எவ்வளவு முன்னிலை கொடுப்பீர்கள்?” என, கட்சி நிர்வாகிகளிடம் கேட்டார்.
சட்டசபை தேர்தலில் அரக்கல்கூடில் போட்டியிட்டு தோற்ற ஸ்ரீதர் கவுடா என்பவர், “அரக்கல்கூடு தொகுதியில் 30,000 ஓட்டுகள் முன்னிலை கொடுப்போம்,” என்றார். “அப்படி என்றால் நீங்கள் எதற்காக தேர்தலில் தோற்றீர்கள்?” என, அமைச்சர் ராஜண்ணா நக்கலாக கேட்டார்.
இதனால் கோபம் அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள், ராஜண்ணாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
'காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேலை வெற்றி பெற வைக்க வந்தீர்களா? இல்லை தோற்கடிக்க வந்தீர்களா?' என, ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினர். பின்னர் தொண்டர்களை, கட்சித் தலைவர்கள் சமாதானப்படுத்தினர்.

