சிம்லா மசூதி விவகாரம் : போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதல்
சிம்லா மசூதி விவகாரம் : போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதல்
ADDED : செப் 12, 2024 12:44 AM

சிம்லா : ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவின் சஞ்சவ்லி பகுதியில் உள்ள சட்டவிரோத மசூதியை இடிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தடுப்புகளை மீறி முன்னேற முயன்றபோது, போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டியடிக்க முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.
சிம்லாவின் சஞ்சவ்லி பகுதியில் உள்ள மசூதி, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகவும், அதை இடிக்கக் கோரியும், ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த மசூதி சட்ட விரோத ஆக்கிரமிப்பு என, 2010ல் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதற்கிடையில், அந்த கட்டடத்தில் மேலும் நான்கு தளங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த கட்டடத்தில் தங்கியிருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிலர், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரி மற்றும் சிலரை தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்தே, இந்தப் பிரச்னை தீவிரமடைந்தது.
சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மசூதியை இடிக்க வேண்டும்; வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும்; வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, வியாபாரிகள் மற்றும் ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இது, அரசியல் ரீதியிலும் பிரச்னையை உருவாக்கியது. இந்த நிலையில், தங்கள் கோரிக்கை மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மசூதியை இடிக்கக் கோரியும், சஞ்சவ்லி பகுதியை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த, பல அமைப்புகள் நேற்று அழைப்பு விடுத்திருந்தன.
இதன்படி, சப்ஜி மண்டி டல்லி பகுதியில் இருந்து, சஞ்சவ்லி பகுதிக்கு ஊர்வலமாக செல்வதற்கு, 1,000த்துக்கும் மேற்பட்டோர் நேற்று குவிந்திருந்தனர்.
சப்ஜி மண்டி டல்லி பகுதியில் போலீசார் அமைந்திருந்த தடுப்புகளை தகர்த்து, போராட்டக்காரர்கள் முன்னேறினர். சஞ்சவ்லி பகுதிக்கு அவர்கள் முன்னேறிய நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் அவர்கள் தகர்த்தெறிந்தனர்.
இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். போராட்டக்காரர்கள் கடும் கோஷம் எழுப்பி முன்னேறியதால், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைக்க முயன்றனர்.
அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்தபடியே சட்டவிரோத மசூதியை இடிக்கும்படி கடும் கோஷம் எழுப்பினர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. நீண்ட நேரத்துக்குப் பின், போராட்டம் முடிவுக்கு வந்தது.