ADDED : ஜூன் 11, 2024 04:26 AM
பெங்களூரு: சட்டவிரோதமான லே - அவுட்களில் உள்ள கட்டடங்களை இடிக்கும் பணிகளை, பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் துவக்கியுள்ளது.
இதுதொடர்பாக, பி.டி.ஏ., வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் அபிவிருத்தி செய்த லே - அவுட்கள், கையகப்படுத்திய இடங்கள், சிவராம் காரந்த் லே - அவுட் உட்பட, பல லே - அவுட்கள், தனியார் லே - அவுட்களில், சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டது, பி.டி.ஏ., கவனத்துக்கு வந்துள்ளது. இவற்றை இடிக்கும் பணிகளை, பி.டி.ஏ., துவக்கியுள்ளது.
தனியார் லே - அவுட் அமைக்க, பி.டி.ஏ.,விடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். அதன்பின் லே - அவுட் அமைத்து, வீட்டுமனைகள் விற்பனை செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் லே - அவுட் அமைத்து, வீட்டுமனை விற்கின்றனர், இத்தகைய லே - அவுட்களில் கட்டப்படும் கட்டடங்கள், தயவு தாட்சண்யமின்றி இடிக்கப்படும்.
சட்டவிரோதமாக லே - அவுட் அமைத்து, வீட்டுமனைகள் விற்போர் மீது, பி.டி.ஏ., சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

