ADDED : பிப் 28, 2025 11:02 PM

பி.யு., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. கர்நாடகா முழுதும் 7,13,862 மாணவ - மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.
கர்நாடகாவில் இன்று முதல் மார்ச் 20ம் தேதி வரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.
மாநிலத்தில் உள்ள 5,050 பி.யு., கல்லுாரிகளை சேர்ந்த 3,35,468 மாணவர்களும், 3,78,389 மாணவியரும், 5 திருநங்கைகளும் என, மொத்தம் 7,13,862 பேர் எழுத உள்ளனர். இம்முறை மாணவர்களை விட மாணவியரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இத்தேர்வு 1,071 தேர்வு மையங்களில் நடக்க உள்ளது.
தேர்வு எழுதச் செல்லும்போது எலக்ட்ரானிக் சாதனங்கள், மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், ஹெட்செட் உள்ளிட்டவற்றை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆடை அணிவதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர் மட்டுமே கேமரா இல்லாத மொபைல் போனை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொதுத் தேர்வு எழுத இருக்கும் பத்தாம் வகுப்பு, பி.யு., இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அரசு பஸ்களில், தங்கள் 'ஹால்டிக்கெட்'டை காண்பித்தால் இலவசமாக பயணம் செய்யலாம்.
தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளை சுற்றி 200 மீட்டர் துாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெராக்ஸ் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -