வழக்குக்காக வந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த அரசு வக்கீல் கைது
வழக்குக்காக வந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த அரசு வக்கீல் கைது
ADDED : மே 11, 2024 06:52 AM

பெங்களூரு: வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட ஜாமின் தொடர்பான நகலைக் கேட்ட பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற, அரசு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருப்பவர் ஸ்ரீராம். இவரை சந்தித்த பெண் ஒருவர், 'நான் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது. அந்த ஜாமினை ரத்து செய்ய, நீதிமன்ற உத்தரவின் நகல் வேண்டும்'' என கேட்டார். அதற்கு வழக்கறிஞர், காட்டன் பேட்டுக்கு வரும்படி தெரிவித்தார்.
அப்பெண்ணும் அங்கு சென்று, ஸ்ரீராமை சந்தித்தார். அங்கிருந்து லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். அச்சமடைந்த அப்பெண், ''லாட்ஜுக்கு வரமாட்டேன்'' என கூறியுள்ளார். வலுக்கட்டாயமாக அவரை அழைத்துச் சென்று, அறையில் தவறான உறவில் ஈடுபட ஒத்துழைக்கச் சொன்னார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பெண், தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வெளியூரில் இருந்ததால், அவரது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து, குறிப்பிட்ட லாட்ஜுக்கு செல்லுமாறு கூறினார்.
அவர்களும் அங்கு சென்று அப்பெண்ணை காப்பாற்றினர். அந்த வழக்கறிஞர் நடவடிக்கை குறித்து வீடியோ எடுத்தனர். இதை பார்த்த அவர், அங்கிருந்து தப்பியோடினார்.
இதுதொடர்பாக காட்டன்பேட் போலீசில் அப்பெண் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அரசு வழக்கறிஞர் ஸ்ரீராமை கைது செய்தனர்.