'ஓட்டுச்சாவடி வாரியான தரவுகளை வெளியிடுவது குழப்பம் ஏற்படுத்தும்'
'ஓட்டுச்சாவடி வாரியான தரவுகளை வெளியிடுவது குழப்பம் ஏற்படுத்தும்'
ADDED : மே 24, 2024 02:25 AM

புதுடில்லி, ஓட்டுப்பதிவு நாளின் முடிவில் ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுகளின் விபரங்களை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் கமிஷனை கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இதையடுத்து, அது தொடர்பான பதில் மனு நேற்று தேர்தல் கமிஷனால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுப்பதிவு விபரங்கள் அடங்கிய '17 சி' படிவத்தை பொது வெளியில் வெளியிட முடியாது. ஏனெனில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களைத் தவிர வேறு யாருக்கும் அதை வழங்க சட்டப்பூர்வ ஆணை இல்லை.
இது தொடர்பான விதிகள் கட்டமைப்பு கடந்த 60 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. படிவம் 17சி யை முழுமையாக வெளியிடுவது, ஒட்டுமொத்த தேர்தலையும் சீர்குலைக்கும் மற்றும் கேடு விளைவிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.