ADDED : ஜூலை 24, 2024 11:54 PM
ராய்ச்சூர் : ராய்ச்சூரின் சந்திரபண்டா கிராமத்தில் மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலையில் மாணவர்களுக்கு, 'புலாவ்' பரிமாறப்பட்டது. இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிலர் வாந்தி எடுக்க துவங்கினர். சிலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. எச்சரிக்கை அடைந்த விடுதி ஊழியர்கள், உடனடியாக 46 மாணவர்களை, ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தகவல் அறிந்த கலெக்டர் நிதீஷ், மாவட்ட சுகாதார அதிகாரி ராகுல், மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தனர்.
பின், விடுதி ஊழியர்களிடம் கேட்டபோது, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை பரிசோதித்த போது, அதில் பல்லி இறந்து கிடந்ததாக தெரிவித்தனர். இது குறித்து, விசாரணை நடக்கிறது.
விடுதியில் காலையில் பல்லி விழுந்த, 'புலாவ்' சாப்பிட்ட 46 மாணவ - மாணவியர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

