புனே பஸ்சில் பலாத்காரம் செய்த குற்றவாளியை அமுக்கியது போலீஸ்
புனே பஸ்சில் பலாத்காரம் செய்த குற்றவாளியை அமுக்கியது போலீஸ்
ADDED : மார் 01, 2025 01:24 AM
புனே: மஹாராஷ்டிராவில், அரசு பஸ்சுக்குள் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவில் உள்ள புனே மாவட்டத்தின் ஸ்வர்கதே பேருந்து நிலையத்தில், பிப்., 25 அதிகாலையில் பஸ்சுக்காக, 26 வயது பெண் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர், இருளில் நின்ற ஒரு பஸ்சை காட்டி, அதுதான் முதலில் புறப்படும் என கூறி, அந்த பஸ்சுக்குள் வைத்து பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு தப்பினார்.
போலீஸ் விசாரணையில், அந்த நபரின் பெயர் தத்தாரே ராம்தாஸ் காடே, 37; ஷிரூர் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளி என தெரிந்தது.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தத்தாரேவை பிடிப்பதற்காக 13 தனிப்படை அமைக்கப்பட்டது. மோப்ப நாய்கள், ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், சொந்த கிராமத்தில் வயல் வெளியில் பதுங்கிய தத்தாரே, போலீசில் நேற்று அதிகாலை சிக்கினார்.
இது குறித்து புனே போலீசார் கூறியதாவது:
புனேயில் இருந்து தப்பியோடிய தத்தாரே, சொந்த ஊரான ஷிரூர் சென்றதாக தகவல் கிடைத்ததால், அங்கு விரைந்து சென்று, கரும்பு வயல்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடினோம்.
மொபைல் போனை அவர் சுவிட்ச் ஆப் செய்திருந்ததால், சிக்னல் வாயிலாக கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, நேற்று முன்தினம் இரவு தேடுதல் பணியை நிறுத்தினோம்.
அப்போதுதான், குணாட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் உணவு, தண்ணீர் கேட்டு தத்தாரே வந்ததாக தகவல் கிடைத்தது.
அந்த வீட்டில் உள்ளவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியோடு, நெல் வயலில் பதுங்கி இருந்த தத்தாரேவை கைது செய்தோம். அவரது கழுத்தில் காயம் உள்ளதால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.