பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு... துாக்கு தண்டனை! சட்ட திருத்தம் கொண்டு வருகிறார் மம்தா
பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு... துாக்கு தண்டனை! சட்ட திருத்தம் கொண்டு வருகிறார் மம்தா
ADDED : ஆக 29, 2024 01:12 AM

கோல்கட்டா : ''பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்து, 16 நாட்கள் ஆகின்றன. ஆனால் நீதி எங்கே?'' என, கேள்வி எழுப்பிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பலாத்கார குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனையை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்யப்போவதாக நேற்று ஆவேசமாக தெரிவித்தார்.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், ஆக., 9ல், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கை, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டும், முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரியும், கோல்கட்டாவில், கடந்த சில நாட்களாக, மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
கோல்கட்டா மற்றும் ஹவுராவில், தலைமை செயலகத்தை நோக்கி, நேற்று முன்தினம் மாணவர்கள் பேரணி நடத்தினர். இதில் பல்வேறு இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
போலீசார், மாணவர்கள் என பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக, 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, கோல்கட்டாவில், திரிணமுல் காங்கிரசின் மாணவர் பிரிவின் நிறுவன தினத்தையொட்டி நடந்த விழாவில், முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
உயிரிழந்த பெண் டாக்டரின் பெற்றோரை, சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு பின் சந்தித்தேன். நான் ஐந்து நாட்கள் தான் அவகாசம் கேட்டேன். உடனடியாக நீதி வேண்டும் என போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள், இந்த வழக்கை சி.பி.ஐ-.,க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தின.
அதன்படி, அந்த வழக்கு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. 16 நாட்களாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. உயிரிழந்த பெண் டாக்டருக்கு நீதி எங்கே? எதிர்க்கட்சிகளுக்கு நீதியெல்லாம் தேவையில்லை. தாமதம் தான் வேண்டும்.
கோல்கட்டாவில் நேற்று முன்தினம் நடந்த போராட்டம், மாணவர் அமைப்புகளால் நடத்தப்பட்டது என, ஒருங்கிணைப்பாளர்கள் கூறினாலும், இது கலவரத்தை உருவாக்கும் நோக்கில், பா.ஜ., - ஏ.பி.வி.பி-.,யால் திட்டமிடப்பட்ட சதி.
பிணங்கள் வேண்டும் என்பதற்காக, பா.ஜ., 'பந்த்' நடத்துகிறது. பெண் டாக்டருக்கு நீதி கேட்கும் இலக்கிலிருந்து விலகி, தற்போது மேற்கு வங்கம் மீது பா.ஜ.,வினர் அவதுாறு பரப்பி வருகின்றனர். வெட்கமற்ற பா.ஜ., பெரும் சதித்திட்டத்தில் ஈடுபடுகிறது.
தாக்குதலுக்கு ஆளான போதிலும், சதி வலையில் விழாமல், உயிரிழப்புகளை தடுத்த போலீசாருக்கு நான் சல்யூட் அடிக்கிறேன்.
பலாத்கார சம்பவங்களை என் அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. பலாத்கார குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனையை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்யப்படும். இதற்காக அடுத்த வாரம் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்.
திருத்தப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் தாமதம் செய்தாலோ அல்லது ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு அனுப்பினாலோ, ராஜ்பவன் முன் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, பா.ஜ., சார்பில், நேற்று, 12 மணி நேர 'பந்த்'துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, கோல்கட்டா உட்பட பல்வேறு இடங்களில், கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. குறைந்த அளவிலேயே கடைகள் இயங்கின. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., நிர்வாகிகளை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

