பீன்யா தொழிற்சாலைகளுக்கு தனி குழாயில் சுத்திகரிப்பு தண்ணீர்
பீன்யா தொழிற்சாலைகளுக்கு தனி குழாயில் சுத்திகரிப்பு தண்ணீர்
ADDED : ஏப் 08, 2024 04:56 AM

பெங்களூரு: ''நாட்டிலேயே முதன் முறையாக, தொழிற்சாலைகளுக்கு தனி குழாய் மூலம், சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்க ஆலோசித்து வருகிறோம்,'' என, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.
பெங்களூரு ஜல்மண்டல் அலுவலகத்தில் நேற்று சிறு, குறு நிறுவன தொழிலதிபர்களுடன், பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பெங்களூரு நகரில் 1,480 எம்.எல்.டி., கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். தற்போது 1,212 எம்.எல்.டி.,யாக சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதன் பயன்பாட்டை அதிகரிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதனால் காவிரி நீரை நம்பி இருக்க தேவையில்லை. நாட்டிலேயே முதன் முறையாக, பீன்யா தொழிற்பேட்டையில், தனி குழாய் மூலம் தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
பெங்களூரு நகரம் போன்று தொழிற்சாலைகள், தொழில்துறை பகுதிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க ஜல்மண்டல் தயாராக உள்ளது.
இந்திய அறிவியல் கழகத்தால் சான்று அளிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது மட்டுமின்றி, சுத்தம் செய்வது உட்பட பல தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். இதன் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இச்சூழ்நிலையில் நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வது, சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாட்டை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்பேசினார்.
நிலத்தடி நீர் குறைவால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும், பீன்யா உட்பட நகரின் முக்கிய தொழில்துறை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வழங்கும் ஜல் மண்டலுக்கு நன்றி. இங்கு 15,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன.
சசிதர ஷெட்டி,
தலைவர்,
கர்நாடக சிறுதொழில் சங்கம்

