தரமான கல்வி என்பது மதிப்பெண் மட்டுமல்ல மாணவர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை
தரமான கல்வி என்பது மதிப்பெண் மட்டுமல்ல மாணவர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை
ADDED : ஜூன் 20, 2024 05:49 AM

பெங்களூரு: ''தரமான கல்வி என்பது மதிப்பெண்கள் மட்டுமல்ல, சமூக மதிப்பு பற்றிய விழிப்புணர்வும் முக்கியம்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று சமூக நலத்துறை மற்றும் கர்நாடக உறைவிடப் பள்ளி கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில், எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவை துவக்கி வைத்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்துக்கு மத்தியில், அரசு உறைவிடப்பள்ளி மாணவி, 625 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பிடித்தது பெருமைக்குரியது.
இத்தகைய திறமையான மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குரியது. தரமான கல்வி என்பது மதிப்பெண்ணில் இல்லை. அறிவியல், சமூக சமத்துவம், தார்மீக மதிப்புகளை வளர்க்க வேண்டும். அதற்கு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும்.
முன்னதாக, தலித் சங்கர்ஷ சமிதியினர், மாநிலத்தில், பள்ளிகள் அருகில் மதுக்கடைகள் இருக்க கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இதன் உத்வேகத்தால், 1994 - 95ல் நான் நிதியமைச்சராக இருந்தபோது, தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளிகள் துவங்கப்பட்டன.
இன்று சமூக நலத்துறையின் கீழ், 833 பள்ளிகளும், சிறுபான்மை நலத்துறையின் கீழ் 123 பள்ளிகளும் உள்ளன. மாநிலத்தின் சில பகுதிகளில் அதிக உறைவிடப் பள்ளிகள் உள்ளன.
அரசியல் சட்டம் அமலக்கு வருவதற்கு முன், கல்வி கட்டாயம் இல்லை. அரசியல் அமைப்பை அம்பேத்கர் உருவாக்கிய பின், சமூகத்தின் அனைத்து பிரிவினரும் கல்வி துறையில் நுழைய முடிந்தது.
சிலர் கல்வி கற்க முடியாமல் பல ஆண்டுகளாக இருந்தனர். இதனால் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாகின. இன்றும் முழுமையான சமத்துவம் வரவில்லை.
குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது அவசியம். புத்தர், பசவண்ணர், அம்பேத்கர், காந்தியின் சிந்தனைகளை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
முன்னர், முன்னேறிய ஜாதியை சேர்ந்த பெண்கள் கூட கல்வி கற்க வாய்ப்பில்லை. கல்வி என்று வரும் போது, அனைத்து ஜாதி பெண்களும் தடுக்கப்பட்டனர். தற்போது பெண்கள் கல்வியில் முன்னேறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.