ADDED : ஜூலை 05, 2024 01:32 AM
புதுடில்லி, டில்லியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் புல்லட் பைக்கை ஓட்டி வந்த பெண், முன்னே சென்ற ஆட்டோ டிரைவர் வழி விடவில்லை என கூறி பேஸ்பால் மட்டையால் அவரை தாக்கி மண்டையை உடைத்தார்.
டில்லி நிஹால் விஹார் பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது. நிறைய ஆட்டோக்கள் நெரிசலில் சிக்கியிருந்தன.
அப்போது இளம்பெண் ஒருவர், தன் தோழியுடன் புல்லட் பைக்கில் வந்தார்.
அவருக்கு முன் நின்றிருந்த ஆட்டோவை முன்நோக்கி நகரச் சொல்லி ஹாரன் அடித்தபடி இருந்தார். எதிரே மற்றொரு ஆட்டோ நின்றிருந்ததால், அந்த ஆட்டோக்காரர் ஹாரன் அடித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை திட்டினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், ஆட்டோ டிரைவரின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்தார்; கையில் வைத்திருந்த பேஸ்பால் மட்டையால் அவர் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில், ஆட்டோ டிரைவரின் மண்டை உடைந்து முகம் முழுதும் ரத்தம் வழிந்தது. அப்போதும் ஆத்திரம் அடங்காமல் கையை முறுக்கிய அவர், முகத்தில் பல முறை குத்தினார்.
சக வாகன ஓட்டிகள் அப்பெண்ணை சூழ்ந்ததும், அங்கிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.
இதை, அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதை பார்த்த மக்கள், அப்பெண்ணின் பைக் எண்ணை வைத்து உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, டில்லி போலீசுக்கு கோரிக்கை வைத்துஉள்ளனர்.