ஒரு நாள் முன்பே வினாத்தாள் கசிவு: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
ஒரு நாள் முன்பே வினாத்தாள் கசிவு: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
ADDED : ஜூலை 22, 2024 01:16 PM

புதுடில்லி: 'நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பாக, அதாவது மே 4ம் தேதியே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவாக, 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் லீக் ஆனது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், ஓ.எம்.ஆர்., எனப்படும் விடைத்தாளில் மோசடி என, பல மோசடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. 40க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலாகின.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலையிலான, அமர்வில், இன்று(ஜூலை 22) இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், நீட் தேர்வுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது என வாதிடப்பட்டது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது: நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பாக, அதாவது மே 4ம் தேதியே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். கைதான அமித் ஆனந்த் என்பவரின் வாக்குமூலத்தின் படி, மே 4ம் தேதி இரவே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நடந்திருக்கலாம். பிறகு எதற்காக காலதாமதம் எனக் கூறி கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது?. எத்தனை மையங்களில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது?.
ராஜஸ்தான், குஜராத்தில் தேர்வு முறைகேடு நடந்ததை வைத்து எப்படி ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்ய முடியும். தற்போதைய தரவுகள் அடிப்படையில் ஹசாரிபாக், பாட்னா ஆகிய 2 இடங்களில் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது உறுதியாகி உள்ளது. வினாத்தாள் நாடு முழுவதும் கசிந்ததா?. நீட் தேர்வில் நடந்துள்ள ஒரு சில முறைகேடுகளை களைய உத்தரவிட நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.