டாக்டர் கொலையால் ஆத்திரம்; அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை; போர்க்களமான கோல்கட்டா
டாக்டர் கொலையால் ஆத்திரம்; அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை; போர்க்களமான கோல்கட்டா
UPDATED : ஆக 15, 2024 12:33 PM
ADDED : ஆக 15, 2024 12:10 PM

கோல்கட்டா: கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவமனையை ஏராளமானோர் சேர்ந்து அடித்து நொறுக்கிய சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் கொலை
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர் மறுநாள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
போராட்டம்
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் மேற்கு வங்கமே பதற்றத்திற்குள்ளாகியுள்ளது. மாணவி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்த படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் அமைதிப் பேரணியை நடத்தினர்.
சமூகவலைதளங்களில் அழைப்பு
இந்த நிலையில், ஆர்.ஜி., கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனயை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து நேற்றிரவு ஏராளமானோர் மருத்துவமனையின் முன்பு குவிந்தனர்.
தடியடி
தடையை மீறி உள்ளே நுழைந்த அவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். நாற்காலிகளை தரையில் அடித்து சூறையாடினர். இதனால், அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசியதுடன், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தவறான பிரச்சாரம்
இது குறித்து கோல்கட்டா போலீஸ் கமிஷ்னர் வினீத் கோயல் கூறியதாவது:- மருத்துவமனையை சேதப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் தவறான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாணவி கொலை சம்பவத்தில் கொல்கத்தா போலீஸ் என்ன செய்யவில்லை?
மாணவியின் குடும்பத்தினர் திருப்தியளிக்கும் விதமாக போலீசார் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், வதந்தியால் திசைதிருப்பப்படுகிறது. நான் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, எனக் கூறினார்.