கல்லுாரியில் ராகிங் கொடுமை: மாணவனுக்கு 'டயாலிசிஸ்'
கல்லுாரியில் ராகிங் கொடுமை: மாணவனுக்கு 'டயாலிசிஸ்'
ADDED : ஜூன் 26, 2024 11:43 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவனை அழைத்து, சில சீனியர் மாணவர்கள் கடந்த மாதம் 15ம் தேதி ராகிங் செய்தனர்.
அப்போது, முதலாமாண்டு மாணவனை, 300க்கும் மேற்பட்ட முறை, 'சிட் அப்' எனப்படும் உட்கார்ந்து எழும்படி செய்துள்ளனர். இதன் காரணமாக, மாணவனின் சிறுநீரகத்தில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, தொற்று பாதிப்பு உண்டானது.
குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள மருத்துவமனையில் அந்த மாணவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், டயாலிசிஸ் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினர்.
இதன்படி, ஒரே வாரத்தில் நான்கு முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் உடல்நலம் தேறிய அவர், தற்போது மீண்டும் கல்லுாரியில் சேர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கல்லுாரி நிர்வாகம் அளித்த புகாரின்படி, ராகிங் தொல்லை அளித்த ஏழு மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.