ராகுலும், கமலாவும் பேசிக்கொள்ளவில்லை: துணை அதிபர் அலுவலகம் மறுப்பு
ராகுலும், கமலாவும் பேசிக்கொள்ளவில்லை: துணை அதிபர் அலுவலகம் மறுப்பு
UPDATED : ஜூலை 14, 2024 08:37 PM
ADDED : ஜூலை 14, 2024 08:33 PM

வாஷிங்டன்: எதிர்கட்சி தலைவர் ராகுலுடன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொலைபேசியில் பேச வில்லை என அமெரிக்க துணை அதிபர் அலுவலகம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.,மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவர் பொறுப்பேற்றார் ராகுல்.
அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோபைடன் , குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுவதற்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். தற்போதைய துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்-ம் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த சிலதினங்களுக்கு முன்னர் எதிர்கட்சிதலைவர் ராகுல் உடன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இருப்பினும் இருதரப்பிலும் பேசப்பட்ட விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் ராகுல் உடன் துணை அதிபர் கமலா எந்த வித தொலை பேசி உரையாடலையும் நடத்தவில்லை .இது தவறான செய்தியாகும் என மறுப்பு தெரிவித்து உள்ளது.