ADDED : செப் 05, 2024 12:24 AM

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மறுவாழ்வுப் பணிக்காக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தன் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 78க்கும் அதிகமானோர் மாயமாகினர்.
இந்த நிலச்சரிவில் உறவினர்களை இழந்தவர்கள், வீடுகளை இழந்தவர்களுக்கு, 100 வீடுகளை கட்டித்தர உள்ளதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்காக மாநில காங்., நிதி திரட்டி வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் தன் ஒரு மாத சம்பளமான 2.3 லட்சம் ரூபாயை, வயநாடு மறுவாழ்வுப் பணிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பொதுமக்கள் நிதி உதவி அளிப்பதற்காக, 'ஸ்டேன்ட் வித் வயநாடு - ஐ.என்.சி.,' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.