தயங்கும் ராகுல், பிரியங்கா: சோனியாவிடம் கார்கே புகார்
தயங்கும் ராகுல், பிரியங்கா: சோனியாவிடம் கார்கே புகார்
UPDATED : மே 02, 2024 11:15 AM
ADDED : மே 02, 2024 01:21 AM

புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி லோக்சபா தொகுதிகளில் போட்டியிட ராகுல், பிரியங்கா ஆகியோர் தயங்குவது குறித்து சோனியாவிடம், மல்லிகார்ஜுன கார்கே புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உ.பி.,யில் உள்ள அமேதி, ரேபரேலி ஆகிய லோக்சபா தொகுதிகள், காங்கிரசின் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன. எனினும், 2019 லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், காங்., - எம்.பி., ராகுல் தோல்வி அடைந்தார்.
வலியுறுத்தல்
அந்த தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றதால், அவர் எம்.பி.,யாக முடிந்தது. நடப்பு லோக்சபா தேர்தலில், வயநாடில் மீண்டும் ராகுல் போட்டியிடுகிறார்.
இத்தொகுதிக்கான ஓட்டுப்பதிவு கடந்த 26ல் நடந்து முடிந்தது. அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்த அவர், தொகுதியில் தீவிர பிரசாரத்தை துவங்கி விட்டார். ஆனால், காங்கிரசோ இன்னும் வேட்பாளரை அறிவித்தபாடில்லை.
அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடும்படி, ராகுலிடம் காங்., மூத்த தலைவர்கள் கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவரோ போட்டியிட மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் காங்., மூத்த நிர்வாகிகள் குழம்பி போயுள்ளனர்.
இது ஒரு புறமிருக்க, தன் தாய் சோனியா மற்றும் பாட்டி இந்திரா ஆகியோர் எம்.பி.,யாக இருந்த ரேபரேலி தொகுதியில் போட்டியிட, ராகுல் சகோதரியும், காங்., பொதுச்செயலருமான பிரியங்கா தயங்குகிறார்.
இத்தொகுதி எம்.பி.,யாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா மூன்று முறையும், சோனியா நான்கு முறையும் பதவி வகித்துள்ளனர். தற்போது சோனியா ராஜ்யசபாவுக்கு தேர்வாகி உள்ளார். இதனால், இத்தொகுதியில் போட்டியிடும்படி பிரியங்காவிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவரோ எதற்கும் அசைந்தபாடில்லை.
உ.பி.,யில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில், 17ல் காங்., போட்டியிடுகிறது. மீதமுள்ள 63 தொகுதிகளில், கூட்டணி கட்சியான சமாஜ்வாதி களம் காண்கிறது. அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டும் காங்., இதுவரை அறிவிக்கவில்லை.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில், வேட்பாளர்களை அறிவிக்காமல், காங்., மேலிடம் மவுனம் காத்து வருவது, அக்கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இத்தொகுதிகளுக்கு, மே 20ல் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.
நீண்ட விவாதம்
இந்நிலையில், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் ராகுல், பிரியங்கா ஆகியோர் போட்டியிட மறுப்பது குறித்து, சோனியாவிடம், கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரில் சந்தித்து புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் விவாதித்தாகவும் கூறப்படுகிறது. இதனால், அமேதி, ரேபரேலி ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே நேற்று காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ''அமேதி மற்றும் ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர்,'' என்றார்.

