ADDED : ஏப் 24, 2024 12:54 AM

கொப்பால், : “சித்தராமையாவை, முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்க, காங்கிரஸ் மேலிட தலைவர் ராகுல் காத்திருக்கிறார்,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
கொப்பாலில் நேற்று அவர் கூறியதாவது:
காங்கிரஸ் மேலிடத்துக்கு, பணம் கொடுக்கும் முதல்வர் தேவை. எனவே லோக்சபா தேர்தல் முடிந்தவுடன், சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து, கீழே இறக்க ராகுல் காத்திருக்கிறார்.
சித்தராமையா யாரிடமும், பணம் வாங்குவதில்லை. யாருக்கும் பணம் கொடுக்கவும் மாட்டார். ஆனால் காங்., மேலிடத்துக்கு பணம் தரும் முதல்வர்தான் தேவை. எனவே, சிவகுமாரை முதல்வராக்க விரும்புகிறது. மாண்டியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில், இது குறித்து ராகுல் உத்தரவிட்டுள்ளார்.
மோடி, மோடி என்பவர்களை கன்னத்தில் அறைய வேண்டும் என, கூறிய அமைச்சர் சிவராஜ் தங்கடகியை எப்படி அழைப்பது என்றே தெரியவில்லை. அவரது கன்னத்தில் நாம் அறைய தேவையில்லை. அது எங்களின் கலாசாரம் அல்ல.
பிரதமர் நரேந்திர மோடியை பற்றி, அவமதிப்பாக பேசிய சிவராஜ் தங்கடகிக்கு புத்திமதி கூறும் கலாசாரம் காங்கிரசில் இல்லை. அது கலாசாரம் இல்லாத கட்சி. நாம் அனைவரும் மோடிக்கு ஓட்டு போட வேண்டும். இதன் மூலம் சிவராஜ் தங்கடகியின் இரண்டு கன்னங்களிலும், பளீரென அறையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
***

