எதிர்க்கட்சி தலைவராக ராகுல் அங்கீகாரம்: முக்கிய நியமனங்களில் பங்களிக்க முடியும்
எதிர்க்கட்சி தலைவராக ராகுல் அங்கீகாரம்: முக்கிய நியமனங்களில் பங்களிக்க முடியும்
ADDED : ஜூன் 26, 2024 11:54 PM

புதுடில்லி: லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை அங்கீகரிப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன் வாயிலாக, பல முக்கிய நியமனங்களை முடிவு செய்வதில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.
லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை நியமிப்பதாக அக்கட்சி நேற்று முன்தினம் அறிவித்தது.
கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலில், மொத்தமுள்ள தொகுதிகளில், 10 சதவீதத்துக்கும் குறைவாக பெற்றதால், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெறும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்தது.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பின், லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அக்கட்சிக்கு கிடைத்துஉள்ளது. இந்த நியமனத்தை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான அறிவிப்பை லோக்சபா செயலகம் நேற்று வெளியிட்டது.
இதன் வாயிலாக, தன் தந்தை ராஜிவ், தாய் சோனியா வழியில், ராகுலும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.
கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையானது இந்தப் பதவி. பார்லிமென்டில் அவருக்கென தனியாக அலுவலகம், அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.
பல முக்கிய நியமனங்களை முடிவு செய்யும் குழுக்களிலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் பங்கேற்க முடியும்.
சி.பி.ஐ., இயக்குனர், தலைமை தேர்தல் கமிஷனர், தேசிய மனித உரிமை கமிஷனர் தலைவர், சி.வி.சி., எனப்படும் தலைமை கண்காணிப்பு கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கு உரியவர்களை நியமிக்கும் குழுவில் அவர் இடம்பெறுவார்.
இந்த நியமனக் குழுவில், பிரதமர் மற்றும் ஒரு மத்திய அமைச்சரும் இடம்பெற்றிருப்பர். பெரும்பான்மை அரசிடம் இருந்தாலும், தன் கருத்தை வலியுறுத்தும் வாய்ப்பு ராகுலுக்கு கிடைத்துஉள்ளது.
லோக்சபாவில் ராகுல் பேசியதாவது:
இந்த சபையை சுமுகமாக நடத்துவதற்கு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு அளிப்போம். எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.