ADDED : மே 05, 2024 11:45 PM
தர்மாவரம்: ''நாட்டை வழிநடத்த ராகுல் உட்பட, 'இண்டியா' கூட்டணியில் உள்ள தலைவர்கள் தகுதியற்றவர்கள். இந்த தகுதி பிரதமர் மோடிக்கு மட்டுமே உள்ளது.
''இதை அறிந்த மக்கள், அவரை மூன்றாவது முறையாக பிரதமராக்க முடிவு செய்து விட்டனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 13ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்த இரு தேர்தல்களிலும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பா.ஜ., ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று பேசியதாவது:
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், ஊழல், மணல் மாபியாக்கள், குண்டர்களின் அட்டகாசம் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவற்றை முடிவுக்கு கொண்டு வரவே, பா.ஜ., - தெலுங்கு தேசம் - ஜனசேனா கூட்டணி அமைத்துள்ளன.
நாடு முழுதும் இதுவரை இரு கட்ட லோக்சபா தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. மக்களின் உற்சாகத்தை பார்க்கும் போது, இந்த இரு தேர்தல்களில் மட்டுமே, பிரதமர் மோடிக்கு, 100 தொகுதிகள் கிடைத்திருக்கும் என தெரிகிறது.
மூன்றாவது கட்ட தேர்தலிலும் பா.ஜ.,வுக்கே அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்ற பிரதமர் மோடியின் இலக்கு நிச்சயம் எட்டப்படும். அந்தளவுக்கு செல்லும் இடங்களிலெல்லாம், பா.ஜ.,வுக்கு அமோக ஆதரவு உள்ளது.
ராகுல் உட்பட எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணியில் உள்ள எந்த தலைவருக்கும் நாட்டை வழிநடத்த தகுதி இல்லை. இந்த தகுதி பிரதமர் மோடிக்கு மட்டுமே உள்ளது.
அவரை மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக்க நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டனர். இது தெரியாமல் எதிர்க்கட்சியினர் வாய்க்கு வந்தபடி தேர்தல் பிரசாரங்களில் உளறி வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும்படி, ராகுல், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இவர்களுக்கு நிச்சயம் மக்கள் ஓட்டளிக்கப் போவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.