தொடர்ந்து ஏவினாலும் பறக்காத ராகுல் ராக்கெட் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கிண்டல்
தொடர்ந்து ஏவினாலும் பறக்காத ராகுல் ராக்கெட் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கிண்டல்
ADDED : மே 06, 2024 05:04 AM

கலபுரகி : ''கடந்த 20 ஆண்டுகளில், ராகுல் என்ற ராக்கெட்டை தொடர்ந்து ஏவி கொண்டே இருக்கின்றனர். தீபாவளியின் போது ஏவும் ராக்கெட்டும், இரண்டாவது முயற்சியிலேயே பறக்கும். ஆனால், ராகுல் என்ற ராக்கெட் இன்னும் பறக்கவில்லை,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கிண்டல் அடித்தார்.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணிபுரிந்த அண்ணாமலை, தற்போது தமிழக பா.ஜ., தலைவராக உள்ளார். இன்ளறவும், கர்நாடகாவில் அவருக்கு செல்வாக்குஉள்ளது.
நல்ல வரவேற்பு
இதை பயன்படுத்தி, லோக்சபா தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் பா.ஜ., மேலிடம் அவரை பிரசாரம் செய்ய வைத்தது. சென்ற இடமெல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பட்டய கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், பிரபல நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் உட்பட வெவ்வேறு துறை வல்லுனர்களுடன், கலபுரகியில் நேற்று அண்ணாமலை கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் என்றுமே தேசியவாதத்துக்கு முன்னுரிமை வழங்கியது கிடையாது. மேற்கத்திய மாண்புகளுக்கு முன்னுரிமை வழங்கி உள்ளது. ஆனால், 2014க்கு பின், இந்தியா என்ற தேசியவாதம் வளர்வதை காண்கிறோம்.
அதாவது எப்போதுமே, தேசியம் தான் முதலில் என்பது அதன் அர்த்தம். எத்தகைய சூழ்நிலையிலும், நாட்டின் நலனை காப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உரி, அபிநந்தன் வர்த்தமான், புல்வாமா, உக்ரைன் போர் என பல பயங்கரவாத சம்பவங்களை பார்க்கும் போது, இந்தியாவின் பலம் மிக்க தலைமையினால் மட்டுமே எதிர்கொள்ள முடிந்தது. அடுத்த 1-00 ஆண்டுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர் கிடைக்க மாட்டார்.
நமக்கு கிடைத்துள்ள மோடி என்ற தலைவரை மீண்டும் ஆதரிக்க வேண்டும். பா.ஜ., 400 தொகுதிகளில் வெற்றி பெற்றால், அரசியல் சாசனத்தை மாற்றி விடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சொல்கிறார்.
அவர் பிரசாரம் செய்யும் 10 இடங்களில், 9ல், இதே விஷயத்தை சொல்கிறார். காங்., ஆட்சியில் இருந்த போது, எத்தனை முறை அரசியல் சாசனத்தை திருத்தினர். ஜனநாயக கொள்கைகளை கொன்றனர் என்பதை பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியிடமிருந்து இந்தியாவின் அரசியல் சாசனத்தை பாதுகாத்து கொள்ள, நரேந்திர மோடிக்கு 400 தொகுதிகளில் வெற்றி தேவை.
தீபாவளி ராக்கெட்
கடந்த 20 ஆண்டுகளில், ராகுல் என்ற ராக்கெட்டை தொடர்ந்து ஏவி கொண்டே இருக்கின்றனர். தீபாவளியின் போது ஏவும் ராக்கெட் இரண்டாவது முயற்சியிலேயே பறக்கும். ஆனால், ராகுல் என்ற ராக்கெட் இன்னும் பறக்கவில்லை.
கலபுரகியில் தந்தை மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் செய்கிறார். மகன் பிரியங்க் கார்கே பிரசாரத்துக்கு தலைமை தாங்குகிறார். மருமகன் ராதாகிருஷ்ணா தொட்டமணி வேட்பாளராக உள்ளார்.
மக்களால், மக்களுக்காக, மக்களே என்பது ஜனநாயகத்தின் பொருள். ஆனால், கலபுரகியில் தந்தையால், மகன் மூலம், மருமகனுக்காக என்ற நிலை உருவாகி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.