அக்னி வீரர் திட்டம் குறித்து ராகுல் பேச்சு: ராஜ்நாத் சிங் பதிலடி
அக்னி வீரர் திட்டம் குறித்து ராகுல் பேச்சு: ராஜ்நாத் சிங் பதிலடி
UPDATED : ஜூலை 01, 2024 04:02 PM
ADDED : ஜூலை 01, 2024 03:34 PM

புதுடில்லி: 'அக்னி வீரர் திட்டம் யூஸ் அண்ட் த்ரோ போன்றது' என லோக்சபாவில் ராகுல் பேசியதற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறுக்கிட்டு, 'பார்லிமென்டை தவறாக ராகுல் வழி நடத்துகிறார்' என பதிலடி கொடுத்தார்.
'யூஸ் அண்ட் த்ரோ'
லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: அக்னி வீரர் திட்டத்தில் ஒரு வீரர் உயிரிழந்தால், அதை வீர மரணமாக இந்த அரசு ஏற்காது. அக்னி வீரர் திட்டத்தில் ஒரு வீரருக்கு 6 மாதங்கள் மட்டுமே பயிற்சி அளிக்கிறார்கள். முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அக்னி வீரர் திட்டம் என்பது 'யூஸ் அண்ட் த்ரோ' போன்றது.
ராணுவத்தில் பிளவு
6 மாதம் மட்டுமே பயிற்சி பெறும் வீரர், 5 ஆண்டு பயிற்சி பெறும் சீன வீரரை எப்படி எதிர்கொள்வார்?. அக்னிவீரர் திட்டத்தால் ராணுவத்தில் பிளவு ஏற்படும். அக்னிவீரர் திட்டத்தால் ராணுவத்தில் பிளவு ஏற்படும். ராணுவத்தில் உள்ள ஒருவருக்கு அதிக சலுகை கிடைக்கும். மற்றவருக்கு சலுகை கிடைக்காது. அக்னிவீரர் திட்டம் ராணுவத்தின் திட்டமல்ல, பிரதமர் மோடியின் திட்டம். இவ்வாறு ராகுல் பேசினார்.
ராஜ்நாத் சிங் பதிலடி
அக்னிவீரர் திட்டம் குறித்து ராகுல் பேசிய போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறுக்கிட்டு பேசியதாவது: ராகுல் தவறான விவரம் கூறுகிறார். அக்னி வீரர் திட்டத்தில் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு தரப்படுகிறது. பார்லிமென்டை தவறாக ராகுல் வழி நடத்துகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
மணிப்பூர் வன்முறை
தொடர்ந்து ராகுல் மணிப்பூர் வன்முறை குறித்து பேசியதாவது: மத்திய அரசின் கொள்கையால் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்திற்கு மத்திய அரசே காரணம். மணிப்பூரை பற்றி எரியவிட்டு உள்நாட்டு போராக்கிவிட்டனர். பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சரோ ஒரு முறை கூட மணிப்பூர் செல்லாதது ஏன்? என ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடவுளிடம் இருந்து செய்தி வரும்
''கடவுளிடம் தொடர்பில் இருக்கும் மோடி, பணமதிப்பிழப்பு, அக்னிவீர் போன்ற திட்டங்களை கடவுளிடம் கேட்டுத்தான் கொண்டுவந்தாரா?'' என கேள்வி எழுப்பினார். குறுக்கிட்ட சபாநாயகர், 'பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்க வேண்டும்'' என்றார். அப்போது பேசிய ராகுல், ''இதை நான் சொல்லவில்லை, பிரதமர் மோடியே கடவுளிடம் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார். நான் இயல்பாக பிறந்தவன் அல்ல, பிதாமகன் என்றும் பேசியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்குமாறு கடவுளிடம் இருந்து செய்தி வந்திருக்கும். அடுத்ததாக, மும்பை துறைமுகத்தை அம்பானிக்கு கொடுத்து விடுங்கள் என்று கடவுளிடம் இருந்து செய்தி வரும்.
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் எதிர்க்கட்சிகள் குஜராத்தில் உங்களை தோற்கடிக்கும். மோடிக்கு பயந்து பாஜ., தலைவர்கள் எனக்கு வணக்கம் கூட வைப்பதில்லை. அந்த அளவிற்கு பிரதமர் மோடி பா.ஜ., எம்.பி.,க்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார். விவசாயிகளுக்காக நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை அகற்றவிட்டு, அவர்களை அச்சமூட்டும் வேளாண் சட்டங்களை கொண்டு வந்தீர்கள்.
பயங்கரவாதிகள்
அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கானது அல்ல, அம்பானி, அதானிக்கானது. அதனை எதிர்த்து சாலையில் திரண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்த சாலை இன்று வரை மூடப்பட்டுள்ளது. அரவணைத்து செல்ல வேண்டிய விவசாயிகளை பயங்கரவாதி என்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படவில்லை'' என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமித்ஷா, ''ராகுல் மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை கூறி வருகிறார்'' எனக் குற்றம் சாட்டினார். ''நான் சொல்வது பொய்யல்ல; உண்மை'' என்றார் ராகுல்.
அமித்ஷா
அமித்ஷா பேசுகையில், ''விவாதத்தின்போது ராகுல் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. அவர் தெரிவித்த விஷயங்களுக்கு அவையிலேயே ராகுல் நிரூபிக்க வேண்டும்'' என அமித்ஷா வலியுறுத்தினார்.