ADDED : டிச 14, 2024 09:35 PM
நொய்டா:பங்குச் சந்தையில் முதலீடு செய்து நிறைய லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி, ரயில்வே அதிகாரியிடம் 56.88 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.
புதுடில்லி அருகே, உ.பி., மாநிலத்தின் நொய்டாவில் வசிப்பவர் அனில் ரெய்னா. ரயில்வே அதிகாரி. இவர், போலீசில் கொடுத்துள்ள புகார்:
பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டித் தருவதாக என் மொபைல் போனுக்கு தகவல் வந்தது. அதில் இருந்த எண்ணுக்கு பணம் அனுப்பினேன். ஆரம்பத்தில் லாபத்துடன் பணத்தை திருப்பி அனுப்பினர். படிப்படியாக 56.88 லட்சம் ரூபாய் வரை செலுத்தினேன். தற்போது அந்தத் தொகையை திருப்பி அனுப்பாமல், மேலும் பணம் டெபாசிட் செய்தால் மட்டுமே பணம் திருப்பித் தரப்படும் என கூறுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கவுதம் புத்தா நகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.