ADDED : ஆக 22, 2024 12:59 AM
திருவனந்தபுரம்,கேரளாவில் நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன், மின் தடையும் ஏற்பட்டது.
கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என, இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது.
அதன்படி நேற்று அதிகாலை, மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தண்டவாளங்களிலும் மரங்கள் விழுந்ததால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக கோட்டயம், ஆலப்புழா வழித்தடங்களில் ரயில் சேவை முடங்கியது.
இதையடுத்து தீயணைப்பு படையினர், கோட்டயம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பல்வேறு சாலைகளில் வெள்ளம் தேங்கியிருந்ததாலும், போதுமான வெளிச்சமின்மையாலும், வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளம், ஆற்றங்கரைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு போன்றவற்றால், வீடுகள் இடிந்ததுடன் மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்டும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தன.