குஜராத்தை புரட்டி போட்ட மழை தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
குஜராத்தை புரட்டி போட்ட மழை தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
ADDED : ஆக 26, 2024 03:12 AM

ஆமதாபாத்: குஜராத்தில், 24 மணி நேரத்தில் 32 செ.மீ., மழை கொட்டியதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, குஜராத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள வல்சாத் மற்றும் நவ்சாரி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
வல்சாத் மாவட்டத்தில் உள்ள வாபியில், நேற்று காலை 6:00 மணி வரையிலான, 24 மணி நேர நிலவரப்படி 32.6 செ.மீ., மழை பெய்தது. இடைவிடாது கொட்டிய மழையால், முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர், தெருக்களை சூழ்ந்தது. இதனால், வாபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முக்கிய நீர்நிலைகளான பூர்ணா, கவேரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளை ஒட்டிய கரையோர மக்கள் அவசர நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பிலிமோரா நகரில் வெள்ளத்தில் சிக்கிய 17 பேரை, பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
நவ்சாரி மாவட்டத்தின் கேர்காமில், 24 மணி நேரத்தில் 24.8 செ.மீ., மழை பதிவானது.
இங்கு குடியிருப்பு பகுதிகள் நீரில் மிதப்பதை அடுத்து, அங்குள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
சூரத், தாபி, நர்மதா மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பூபேந்திர படேல், மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

