ADDED : ஆக 04, 2024 11:09 PM

பெங்களூரு: கர்நாடக ராஜ்பவனை பா.ஜ., தனது கட்சி அலுவலகமாக பயன்படுத்துகிறது,'' என்று, அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
யாத்கிர் எஸ்.ஐ., பரசுராம் மரணத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
அரசு நேர்மையாக விசாரணை நடத்தும். பரசுராம் மனைவி ஸ்வேதாவிடம் மொபைல் போனில் பேசினேன். அவர் எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
உடல்நிலையை நன்றாக கவனித்து கொள்ளும்படி ஆறுதல் கூறினேன். பரசுராம் மரணம் மாரடைப்பு என்று சிலரும், தற்கொலை என்று சிலரும் கூறுகின்றனர். உண்மை கண்டிப்பாக வெளிவரும்.
விஜயேந்திரா பா.ஜ., தலைவராக இருப்பதை, அவரது கட்சியில் இருப்பவர்களே விரும்பவில்லை. பாதயாத்திரையில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை.
கவர்னரை வைத்து, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் வேலையில், பா.ஜ., மேலிடம் இறங்கி உள்ளது.
ராஜ்பவனை கட்சி அலுவலகமாக அக்கட்சி பயன்படுத்துகிறது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டாக இணைந்து, பாதயாத்திரை செல்லட்டும். அவர்களை யார் தடுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.