ADDED : ஏப் 18, 2024 12:27 AM
முசாபர்நகர்:உத்தர பிரதேச மாநிலத்தில், முசாபர்நகர், கைரானா, சஹாரன்பூர் ஆகிய இடங்களில் பா.ஜ., வேட்பாளர்களை புறக்கணிக்க ராஜபுத்திர சமூகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
உ.பி., மாநிலம் முசாபர் நகர், கைரானா மற்றும் சஹாரன்பூர் பகுதிகளில் வசிக்கும் ராஜபுத்ர சமூகத்தினர் 'மஹா பஞ்சாயத்து' எனப்படும் ஊர்கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேட்பாளர் தேர்வில் ராஜபுத்திர சமூகத்தை பா.ஜ., புறக்கணித்து விட்டது.
எனவே, முசாபர் நகர், கைரானா மற்றும் சஹாரன்பூர் தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்களை புறக்கணிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, கிசான் மஸ்தூர் சங்கதன் தேசியத் தலைவரும், அப்பகுதியின் முக்கிய ராஜபுத்திர இன தலைவருமான தாக்கூர் பூரன் சிங் கூறியதாவது:
கேடா பகுதியில் நேற்று முன் தினம் மஹாபஞ்சாயத்து நடந்தது. முசாபர்நகர் தொகுதி முழுதும் வசிக்கும் ராஜபுத்திர சமூகத்தினர் பங்கேற்றனர்.
வேட்பாளர் தேர்வில் ராஜபுத்திர சமூகத்தை பா.ஜ., அவமதித்து விட்டதாக ஏராளமானோர் குற்றம் சாட்டினர். இந்த மூன்று பகுதிகளிலும் ராஜபுத் சமூக மக்கள் பா.ஜ., வேட்பாளருக்கு எதிராக ஓட்டுப்போட முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் சில பகுதிகளில் நாளை தேர்தல் நடக்கிறது. முசாபர் நகரில் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சஞ்சீவ் பல்யான், கைரானா தொகுதியில் பிரதீப் சவுத்ரி ஆகியோர் பா.ஜ., சார்பில் போட்டியிடுகின்றனர். சஹாரன்பூர் தொகுதியில் ராகவ் லகன்பால் சர்மாவை பா.ஜ., களம் இறக்கியுள்ளது.

