ADDED : ஏப் 03, 2024 11:53 PM
பார்லிமென்டில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் முருகன் உட்பட 12 பேர், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் முன்னிலையில், ராஜ்ய சபா எம்.பி.,க்களாக பதவியேற்றனர்.
ராஜ்யசபாவில் எம்.பி.,க்களாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 54 பேரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், காலியாகியுள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய எம்.பி.,க்கள் தேர்வாகியிருந்தனர்.
இவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தற்போது கூட்டத்தொடர் நடக்கவில்லை என்பதால், புதிய பார்லி.,யில் உள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் நாராயண் மற்றும் ராஜ்யசபா செகரட்டரி ஜெனரல் மோடி மற்றும் ராஜ்யசபா செயலக உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதில், மத்திய இணைஅமைச்சரும், லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக களமிறங்கி உள்ளவருமான முருகன், ராஜ்யசபா எம்.பி.,யாக மீண்டும் பதவியேற்றார்.
புதிய எம்.பி.,க்கள் வரிசையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனோஜ் ஜாவும் பதவியேற்றுக் கொண்டார்.
இவரை தவிர, பீஹாரிலிருந்து தர்ம்ஷிலா குப்தா, சஞ்சய் யாதவ் ஆகியோரும் பதவியேற்றனர்.
ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து ஹர்ஷ் மஹாஜன், ஹரியானாவிலிருந்து சுபாஷ் சந்தர், மஹாராஷ்டிராவிலிருந்து மேதா குல்கர்னி, சந்திரகாந்த் ஹண்டோர், கர்நாடகாவிலிருந்து சந்திசேகர் ஆகியோர் பதவியேற்றனர்.
மேலும், குஜராத்திலிருந்து கோவிந்த்பாய் தோலக்யா, உ.பி.,யில் இருந்து சாத்னா சிங், ம.பி.,யில் இருந்து அசோக் சிங்கும் எம்.பி.,க்களாக பதவியேற்றனர்.
- நமது டில்லி நிருபர் -

