ADDED : செப் 10, 2024 06:35 AM

மலைநாடு மாவட்டம் என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு, சுற்றுலாத் தலங்களுக்கு மட்டும் இன்றி ஆன்மிகத்திற்கும் பெயர் பெற்றது. சிருங்கேரி சாரதாம்பா கோவில் உட்பட இங்கு ஏராளமான பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. அதில், ஒன்றான கோதண்ட ராமசுவாமி கோவில் பற்றிப் பார்க்கலாம்.
சிக்கமகளூரு அருகே ஹிரேமகளூரில் உள்ளது கோதண்ட ராமசுவாமி கோவில். இந்த கோவில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஹொய்சாளா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில், கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டட கலையை பார்த்து பிரமித்துப் போகின்றனர். ராமர், லட்சுமணன், சீதை உருவங்களை உள்ளடக்கிய பல தெய்வங்களின் உருவங்கள் மூலஸ்தானத்தில் உள்ளன.
மூலஸ்தானத்தின் வெளிப்புறத்தில் விஷ்ணு வேதங்களும் உள்ளன. தினமும் அதிகாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். ஸ்ரீராமநவமி, ஹனுமன் ஜெயந்தி கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பெங்களூரில் இருந்து இந்த கோவில் 239 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, சிக்கமகளூருக்கு அடிக்கடி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சிக்கமகளூரு சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் ஹிரேமகளூரு செல்லலாம். காரில் செல்வோர், பெங்களூரில் இருந்து துமகூரு, ஹாசன் வழியாக கோவிலை சென்றடையலாம். - -நமது நிருபர்- -