ராம்விலாஸ் பஸ்வானா ? சிராக் பஸ்வானா ? - பிரசார மேடையில் உளறிய நிதீஷ்
ராம்விலாஸ் பஸ்வானா ? சிராக் பஸ்வானா ? - பிரசார மேடையில் உளறிய நிதீஷ்
ADDED : மே 11, 2024 06:43 PM

பாட்னா: பீஹாரில் தேர்தல் பிரசாரத்தின் போது, ஹாஜிப்பூர் தொகுதி வேட்பாளர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு வாக்களியுங்கள் என அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் , மறைந்த ராம்விலாஸ்பஸ்வான் பெயரை கூறி உளறிய சம்பவம் நடந்துள்ளது.
எழுகட்ட லோக்சபா தேர்தலில் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்தன. இந்நிலையில் பீஹாரில் பா.ஜ., கூட்டணியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், மறைந்த ராம்விலாஸ்பஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.இதில் லோக்ஜன சக்தி கட்சிக்கு 5 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ஹாஜிபூர் லோக்சபா தொகுதியில் கட்சியின் தலைவரும் மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் போட்டியிடுகிறார்.
இத்தொகுதியில் (11.05.2024) நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சிராக்பஸ்வானை ஆதரித்து நிதீஷ்குமார் பேசியது, பீஹாரில் வளர்ச்சி பணிகள் தடையின்றி தொடர இத்தொகுதியின் வேட்பாளர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள என உளறினார்.
2020ம் ஆண்டே ராம்விலாஸ்பஸ்வான் மறைந்துவிட்டார். அவரது பெயரை இன்னும் உச்சரிக்கிறாரே, என மேடையில் இருந்தவர்கள் முனுமுனுத்தனர். பின்னர் சுதாரித்துக்கொண்ட முதல்வர் நிதீஷ், ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானுக்கு வாக்களியுங்கள் என திருத்திக்கொண்டார்.