பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து மன்னிப்பு கோரினார் ராமாராவ்
பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து மன்னிப்பு கோரினார் ராமாராவ்
ADDED : ஆக 16, 2024 10:36 PM

ஹைதராபாத் :தெலுங்கானாவில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்காக, முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி எம்.எல்.ஏ.,வாக கே.டி.ராமாராவ் உள்ளார்.
இவர் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன். சமீபத்தில் கட்சி கூட்டத்தில் பேசிய ராமாராவ், தெலுங்கானாவில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிருக்கான இலவச பஸ் திட்டம் குறித்து கிண்டலாக பேசினார்.
'அரசு பேருந்தில் இடம்பிடிக்க பெண்கள் சண்டையிட்டு கொள்கின்றனர். முழு குடும்பமும் இலவசமாக பஸ்சில் பயணித்து, பல்வேறு வீட்டு வேலைகளை செய்கின்றனர்.
'காய்கறி நறுக்குவது, தையல் பின்னுவது, நடனமாடுவது, அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிடுவது என பல்வேறு விஷயங்கள் இலவச பஸ் பயணத்தில் நடக்கின்றன' என, அவர் கிண்டல் செய்தார்.
இதற்கு, தெலுங்கானாவில் உள்ள பெண்கள் அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமாராவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் தனாசாரி அனுசூயா, “பஸ்சில் பெண்கள் இஞ்சி, வெங்காயம் உரிப்பதில் என்ன தவறு? பெண்கள் வீட்டு வேலை செய்பவர்கள் மட்டுமே என்ற தொனியில், அவர்களை இழிவாக பேசியது பொருத்தமற்றது; இழிவானது.
''இந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என, அவர் வலியறுத்தினார்.
இதையடுத்து, தன் சமூக வலைதள பக்கத்தில் கே.டி.ராமாராவ் மன்னிப்பு கோரினார்.
அதில், 'கட்சிக் கூட்டத்தின் போது நான் பேசிய விஷயங்கள், என் சகோதரிகளுக்கு ஏதேனும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால், வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என் சகோதரிகளை புண்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை' என அவர் தெரிவித்துள்ளார்.

