ADDED : ஏப் 12, 2024 01:04 AM

புதுடில்லி:புனித ரம்ஜான் மாதத்தின் முடிவை குறிக்கும் வகையில், நேற்று ரம்ஜான் பண்டிகையை, தேசிய தலைநகர் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பாரம்பரியமான முறையில் புத்தாடை அணிந்து மசூதிகள் மற்றும் ஈத்கா மைதானங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
மதில் சூழ்ந்த நகரத்தில் உள்ள 17ம் நுாற்றாண்டு ஜும்மா மசூதியில் காலை தொழுகைக்காக ஏராளமானோர் கூடி, வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.
சாந்தினி சவுக், மீனா பஜார், தரிபா கலன் உள்ளிட்ட ஜும்மா மசூதியைச் சுற்றியுள்ள சந்தைகள்விழாக்கோலம் பூண்டிருந்தன.
நேற்று முன்தினம் இரவு முதலே திருவிழாவிற்கான ஷாப்பிங் விறுவிறுப்பாக காணப்பட்டது. ஒரு மாத விடியற்காலை முதல் அந்தி வரையிலான நோன்பு காலத்திற்குப் பின், தங்கள் அண்டை வீட்டினர், நண்பர்கள், உறவினர்களை சந்தித்து இனிப்புகளை இஸ்லாமியர்கள் பகிர்ந்து கொண்டனர்.
