'ராமேஸ்வரம் கபே' குண்டு வெடிப்பு; கைதான ஐவரிடம் 'ஸ்பாட்' விசாரணை
'ராமேஸ்வரம் கபே' குண்டு வெடிப்பு; கைதான ஐவரிடம் 'ஸ்பாட்' விசாரணை
ADDED : ஆக 06, 2024 02:05 AM

பெங்களூரு : 'ராமேஸ்வரம் கபே' குண்டு வெடிப்பு வழக்கில் கைதான ஐந்து பேரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தினர்.
பெங்களூரின் குந்தலஹள்ளியில், 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டல் உள்ளது. நடப்பாண்டு மார்ச் 1ல், மதியம் 1:00 மணி அளவில், இங்கு குண்டு வெடித்தது. ஹோட்டல் ஊழியர்கள் மூவர் காயமடைந்தனர்.
ரூ.10 லட்சம் பரிசு
முதலில் இது தொடர்பாக, சி.சி.பி., போலீசார் விசாரித்தனர். சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்ததால், இந்த வழக்கு என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விசாரணையை துவக்கிய அதிகாரிகள், குண்டு வெடிப்பில் தொடர்புள்ளோர் பற்றி, துப்பு கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்திருந்தனர்.
இந்த சம்பவத்தில், பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த பயங்கரவாத அமைப்பின் மாஜ் முனீர் அகமது, சிக்கமகளூரில் வசிக்கும் முஜாமில் ஷரீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர்கள் கொடுத்த தகவலின்படி, மேற்கு வங்கத்தில் முசாவீர் ஹுசேன் ஷாஜிப், அப்துல் மர்தீன் தாஹர் ஆகியோரை, ஏப்ரல் 12ல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர் விசாரணை
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக, மே 21ல் 29க்கும் மேற்பட்ட இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மே 24ல் வழக்கில் ஐந்தாவது குற்றவாளி ஷோயிப் அகமது கைது செய்யப்பட்டார். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து, விசாரணை நடத்துகின்றனர்.
இவர்கள் ஐந்து பேரையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று பெங்களூரின் ராமேஸ்வரம் கபேவுக்கு, அழைத்து வந்தனர்.
குண்டுவெடிப்பு நாளன்று, முஜாவீர் ஹுசேன் ஷாஜிப் எங்கிருந்தார்; எப்படி நடந்து வந்தார்; கபேவுக்குள் எங்கெங்கு சுற்றினார்; வெடிகுண்டு இருந்த பையை, எந்த இடத்தில் வைத்தார்; அங்கிருந்து எப்படி தப்பினார் என்பதை, அப்படியே செய்து காண்பித்தார்.
சம்பவம் நடந்த போது, அவர் அணிந்திருந்த அதே உடை, தொப்பியை வைத்திருந்தனர். அனைத்தையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.
கபே அருகில் உள்ள பஸ் நிலையத்தில், அவர் எவ்வளவு நேரம் பஸ்சுக்காக காத்திருந்தனர் என்பதையும், வீடியோ பதிவு செய்தனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகள் வருகையால், ராமேஸ்வரம் கபே சுற்றுப்பகுதி ரோடுகளில், போக்குவரத்தை தடை செய்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.