ரன்யா ராவுக்கு ஜாமின் மறுப்பு; காவலில் எடுக்க சி.பி.ஐ., தீவிரம்
ரன்யா ராவுக்கு ஜாமின் மறுப்பு; காவலில் எடுக்க சி.பி.ஐ., தீவிரம்
ADDED : மார் 14, 2025 11:51 PM

பெங்களூரு : துபாயில் இருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கக் கட்டிகள் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். ஜாமின் கேட்டு, பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, ரன்யாவுக்கு ஜாமின் வழங்க வருவாய் புலனாய்வு பிரிவு வக்கீல் மது ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜாமின் கிடைத்தால் சாட்சிகள் அழிக்க வாய்ப்பு உள்ளதாக முறையிட்டார்.
பெண் என்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கும்படி, ரன்யா ராவ் தரப்பு வக்கீல் கிரண் ஜவளி கேட்டுக் கொண்டார். இருதரப்பு வாதங்களும் கடந்த 12ம் தேதி முடிந்தது. தீர்ப்பை 14ம் தேதிக்கு நீதிபதி விஸ்வநாத் கவுடர் ஒத்திவைத்தார். அதன்படி நேற்று தீர்ப்பு கூறினார்.
வருவாய் புலனாய்வு பிரிவு தரப்பு வாதத்தை ஏற்று, ரன்யாவுக்கு ஜாமின் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.
ரன்யா தங்கக் கட்டிகள் கடத்தியது தொடர்பாக, சி.பி.ஐ.,யும், அமலாக்கத்துறையும் விசாரிக்கின்றன. இதுதொடர்பாக சி.பி.ஐ., தனியே வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, ரன்யாவை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க தயாராகி வருகிறது.
ரன்யா தங்கக் கட்டிகள் கடத்தியதில், அவரது தந்தையான கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்கவும், விமான நிலையத்தில் 'புரோட்டாகால்' விதி மீறப்பட்டதா என்பதை பற்றி விசாரிக்கவும், கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா தலைமையில், அரசு குழு அமைத்திருந்தது.
நேற்று மதியம் விமான நிலையத்தின், இரண்டாவது முனையத்திற்கு சென்ற கவுரவ் குப்தா தலைமையிலான குழுவினர், 'புரோட்டாகால்' அதிகாரிகளிடம் விசாரித்து தகவல் பெற்றுக் கொண்டனர்.