சினிமா வாய்ப்பு அளிப்பதாக பாலியல் பலாத்காரம்; நடிகர் பாபுராஜ் மீது வழக்கு
சினிமா வாய்ப்பு அளிப்பதாக பாலியல் பலாத்காரம்; நடிகர் பாபுராஜ் மீது வழக்கு
ADDED : செப் 04, 2024 01:49 AM

மூணாறு : சினிமாவில் வாய்ப்பளிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பெயரில் அடிமாலி போலீசார் மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கேரள திரையுலகில் நடிகைகள், பெண் கலைஞர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. அதில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், என அனைத்து தரப்பினரும் சிக்கி பட்டியல் நாளுக்கு, நாள் நீண்டு கொண்டிருக்கின்றது.
அந்த பட்டியலில் நடிகர் பாபுராஜ் ஏற்கனவே இடம் பெற்ற நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நடிகர் பாபுராஜ் சினிமாவில் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் 'ஆன்லைன்' மூலம் டி.ஐ.ஜி., யிடம் புகார் அளித்தார். அதில் மூணாறு அருகே கல்லார் பகுதியில் உள்ள பாபுராஜ்க்கு சொந்தமான தங்கும் விடுதியிலும், ஆலுவாவில் உள்ள வீட்டில் வைத்தும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். அந்த பெண்ணிடம் போலீசார் ஆன்லைன் வாயிலாக வாக்கு மூலம் பதிவு செய்தனர்.
அதில் கூறியதாவது: நான் படித்து முடித்த பிறகு மூணாறு அருகே கல்லார் பகுதியில் உள்ள நடிகர் பாபுராஜ்க்கு சொந்தமான தங்கும் விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றினேன். அங்கு நடந்த பாபுராஜின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அவரின் அறிமுகம் கிடைத்தது.
நடிகையாக வேண்டும் என என்னுள் இருந்த ஆசையை அவர் பயன்படுத்தி கொண்டார். அதன்பிறகு ஒரு திரைபடத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
பின்னர் 2019ல் புதிய சினிமா தொடர்பான விவாதத்திற்கு ஆலுவாவில் உள்ள வீட்டிற்கு அழைத்தார். அங்கு தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் ஆகியோர் உள்ளதாக கூறினார்.
அதனை நம்பி சென்றபோது வீட்டில் பாபுராஜ், ஊழியர் ஒருவர் மட்டும் இருந்தனர். என்னை பாபுராஜ் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனிடையே ' பிளாக் காபி' என்ற சினிமாவில் உதவி இயக்குனராக சேர்த்து விடுவதாக அழைத்தார். நான் மறுத்து விட்டேன் என வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கல்லார் பகுதியில் உள்ள பாபுராஜின் தங்கும் விடுதி அடிமாலி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டது.
அதனால் பெண் அளித்த புகார் அடிமாலி ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு பாபுராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.