மருத்துவ கல்லுாரியில் சிறுமி பலாத்காரம்: டாக்டர் கைது
மருத்துவ கல்லுாரியில் சிறுமி பலாத்காரம்: டாக்டர் கைது
ADDED : செப் 14, 2024 01:21 AM
ஆக்ரா, உத்தர பிரதேசத்தில் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியை, ஜூனியர் டாக்டர் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி., மாநிலம் ஆக்ராவில் சரோஜனி நாயுடு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது.
இங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில், 11 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த 6ல் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை தேறிவந்த நிலையில், கடந்த 10ல் இரவுப் பணியில் இருந்த ஜூனியர் டாக்டர் தில்ஷாத் உசைன் சிறுமியை பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதாக கூறி தன் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அவரிடமிருந்து தப்பி ஓடி வந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தன் தாயிடம் கூறியுள்ளார்.
இது குறித்து அறிந்த மருத்துவக் கல்லுாரியின் முதல்வர், பாலியல் வன்கொடுமையில் சம்பந்தபட்ட டாக்டரை சஸ்பெண்ட் செய்தார். மேலும் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஜூனியர் டாக்டர் தில்ஷாத் உசைனை கைது செய்த போலீசார், அவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.