பலாத்காரத்துக்கு ஆளான மாணவி பலி பி.டி., ஆசிரியரை தேடும் போலீஸ்
பலாத்காரத்துக்கு ஆளான மாணவி பலி பி.டி., ஆசிரியரை தேடும் போலீஸ்
ADDED : ஆக 17, 2024 11:49 PM

வாரணாசி: உத்தர பிரதேசத்தில் உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது பள்ளி மாணவி, உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
எட்டாம் வகுப்பு
உ.பி.,யில் சோன்பத்ரா மாவட்டத்தின் துாத்தி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில், அந்த பள்ளியின் பி.டி., எனப்படும் உடற்கல்வி ஆசிரியர் விஷாம்பரர், 30, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அந்த மாணவியை அழைத்து சென்றார்.
ஆனால் விஷாம்பரர், தன் வீட்டிற்கு அந்த மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானம் என பயந்து, தன் பெற்றோரிடமும் அந்த மாணவி கூறாமல் மறைத்தார். இதற்கிடையே, அந்த மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சத்தீஸ்கரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு பெற்றோர் அனுப்பினர்.
ஆனால், மாணவியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தன் உறவினரிடம் அந்த மாணவி கூறினார்.
அதிர்ச்சி
இதையறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் பற்றி வெளியே தெரிவிக்காமல் இருக்க, மாணவியின் குடும்பத்திற்கு உடற்கல்வி ஆசிரியர் விஷாம்பரர், 30,000 ரூபாய் அளித்துள்ளார்.
வெளி உலகத்திற்கு பயந்து, மாணவியின் பெற்றோரும் இந்த விவகாரத்தை மறைத்தனர். எனினும், மாணவியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், உத்தர பிரதேசத்தின் பனாரஸ் ஹிந்து பல்கலை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே, மாணவியின் தந்தை சமீபத்தில் இந்த விவகாரம் பற்றி போலீசில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், விஷாம்பரர் தலைமறைவானார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி சிகிச்சை பலனின்றி, கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.