சிறையில் இருந்தே ஜெயித்த ரஷித், அம்ரித்பால் பதவியேற்பு
சிறையில் இருந்தே ஜெயித்த ரஷித், அம்ரித்பால் பதவியேற்பு
ADDED : ஜூலை 06, 2024 12:55 AM

புதுடில்லி, லோக்சபா தேர்தலில் சிறையில் இருந்தபடி வென்ற, 'இன்ஜினியர்' ரஷித் என்றழைக்கப்படும், ஷேக் அப்துல் ரஷித், 56, காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், 31, ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் பார்லிமென்டிற்கு அழைத்து வரப்பட்டு, எம்.பி.,க்களாக நேற்று முறைப்படி பதவியேற்றனர்.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், 'உபா' எனப்படும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்துல் ரஷித், 2019 முதல், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில், ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சிறையில் இருந்தபடி சுயேச்சையாக போட்டியிட்ட அவர், தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லாவை இரண்டு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில், 2023 ஏப்ரலில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ருகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில், பஞ்சாபின் கதுார் சாஹிப் தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்ட அவர் வென்றார்.
இன்ஜினியர் ரஷித், அம்ரித்பால் சிங் ஆகியோர் தேர்தலில் வென்றாலும், சிறையில் இருந்ததால், நடந்து முடிந்த லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரின் போது, எம்.பி.,யாக பதவியேற்க வரவில்லை.
எம்.பி.,யாக பதவியேற்க இருவருக்கும், சமீபத்தில் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அனுமதி அளித்தது. இதன்படி, இன்ஜினியர் ரஷித்துக்கு இரண்டு மணி நேரம் பரோல் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், அம்ரித்பால் சிங்கிற்கு நான்கு நாட்கள் பரோல் வழங்கியது.
இந்நிலையில், பார்லி., வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், லோக்சபா சபாநாயகர் அறைக்கு, இன்ஜினியர் ரஷித், அம்ரித்பால் சிங் ஆகியோர் நேற்று அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து, அவர்கள் முறைப்படி எம்.பி.,யாக பதவியேற்றனர்.