ADDED : மே 25, 2024 06:05 AM
ஹெப்பகோடி : 'ரேவ் பார்ட்டி' வழக்கில், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக, ஹெப்பகோடி எஸ்.ஐ., உட்பட 3 போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு, ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில், கடந்த 19ம் தேதி ரேவ் பார்ட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட தெலுங்கு நடிகையர்கள் ஹேமா, ஆஷி ராய் உட்பட 86 பேர் போதை பொருள் பயன்படுத்தியது,
ரத்தம், தலைமுடி மாதிரி ஆய்வில் தெரிய வந்துள்ளது. விருந்தில் பங்கேற்ற மேலும் 100 பேரை கண்டறிந்து அவர்களின் ரத்தம், தலைமுடி மாதிரியை ஆய்வுக்கு அனுப்பவும் சி.சி.பி., போலீசார் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில் ரேவ் பார்ட்டி நடந்தது பற்றி, சி.சி.பி., போலீசாருக்கு கிடைத்த தகவல், ஹெப்பகோடி போலீசாருக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது.
பார்ட்டிக்கு போலீசாரும் உடந்தையாக இருந்ததாக புகார் கூறப்படுகிறது.
இதையடுத்து பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக, ஹெப்பகோடி போலீஸ் நிலைய எஸ்.ஐ., கிரிஷ், ஏ.எஸ்.ஐ., நாராயணசாமி, போலீஸ்காரர் தேவராஜ் ஆகிய மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து, பெங்களூரு ரூரல் எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதண்டி நேற்று உத்தரவிட்டார்.
