'ரேவ் பார்ட்டி' வழக்கு சி.சி.பி.,க்கு மாற்றம் விசாரணையில் 'திடுக்' தகவல்கள் அம்பலம்
'ரேவ் பார்ட்டி' வழக்கு சி.சி.பி.,க்கு மாற்றம் விசாரணையில் 'திடுக்' தகவல்கள் அம்பலம்
ADDED : மே 22, 2024 10:46 PM
பெங்களூரு: பெங்களூரில் பண்ணை வீட்டில் நடந்த, 'ரேவ் பார்ட்டி' வழக்கு சி.சி.பி., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. விருந்தில் பங்கேற்ற ஒவ்வொருவரிடமும் தலா 2 லட்சம் ரூபாய், வசூலித்தது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு ரூரல் ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில், கடந்த 19ம் தேதி இரவு 'ரேவ் பார்ட்டி' நடந்தது. அங்கு போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, சி.சி.பி., போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது எம்.டி.எம்.ஏ., கோகைன், ஹைட்ரோ கஞ்சா ஆகிய போதைப் பொருட்கள் சிக்கின.
'பார்ட்டி' க்கு ஏற்பாடு செய்த, நாகபாபு, 32, அருண்குமார், 35, வாசு, 35, ரனதீர், 43, முகமது அபுபக்கர் சித்திக், 29 ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சி.சி.பி., நடத்திய சோதனையின் போது, பார்ட்டியில் 101 பேர் இருந்தனர்.
இவர்களில் சிலர் தெலுங்கு நடிகர், நடிகையர், மாடல்கள் என்று சொல்லப்படுகிறது. பார்ட்டியில் பிரபல தெலுங்கு நடிகை ஹேமாவும் பங்கேற்றதை, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று முன்தினம் உறுதி செய்தார்.
இந்த வழக்கை ஹெப்பகோடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வழக்கை சி.சி.பி., விசாரணைக்கு மாற்றி, கர்நாடக போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகன் உத்தரவிட்டார்.
விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.
250 பேர் பங்கேற்பு
சி.சி.பி., போலீசார் நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கைது செய்யப்பட்ட வாசு தான், பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து உள்ளார்.
இதில் கலந்து கொள்ள ஒவ்வொருவரிடம் இருந்து, தலா 2 லட்சம் ரூபாயை, வாசுவுடன் கைதான மேலும் நான்கு பேர் வசூலித்து உள்ளனர். வசூல் செய்த பணத்தில் போதைப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.
கடந்த 19ம் தேதி மாலை 5:00 மணியில் இருந்தே பார்ட்டி துவங்கி உள்ளது. 250 பேர் கலந்து கொண்டனர்.
இதில் 100க்கும் மேற்பட்டோர், குறிப்பிட்ட நேரம் மட்டும் கலந்து கொண்டு வெளியேறி உள்ளனர். அவர்களும் போதைப் பொருள் பயன்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது.
பிறந்தநாள் நிகழ்ச்சி
இதையடுத்து, பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் பட்டியலை, சி.சி.பி., போலீசார் சேகரிக்க துவங்கி உள்ளனர்.
பார்ட்டியில் கலந்து கொண்டோரிடம், ஒருவேளை இங்கு போலீஸ் வந்தால் பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடுகிறோம் என்று கூறுங்கள் என, வாசு கூறியதும் தெரிந்து உள்ளது.
பார்ட்டியில் கலந்து கொண்ட சிலருக்கு உல்லாசமாக இருக்க, இளம்பெண்கள் சப்ளை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் சி.சி.பி., போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
பார்ட்டியில் கலந்து கொண்டோரின் ரத்தம், தலைமுடி மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஒருவேளை அறிக்கையில் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தால், இந்த வழக்கு விஸ்வரூபம் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

