ADDED : ஏப் 30, 2024 07:56 AM

சாம்ராஜ் நகர்: மறு ஓட்டுப்பதிவு நடந்த சாம்ராஜ்நகரில் 528 வாக்காளர்களில் 71 பேர் மட்டுமே நேற்று ஓட்டு போட்டனர்.
சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஹனுரின் மலை மஹாதேஸ்வரா மலை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஐந்து கிராமங்களுக்கான ஓட்டுச்சாவடி இன்டிகநத்தா கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறி, கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களை சமாதானம் செய்து அழைத்து வர அதிகாரிகள் முயற்சித்தனர்.
ஆனால், வாக்குவாதம் முற்றி, ஓட்டுச்சாவடியை, வாக்காளர்கள் துவம்சம் செய்தனர். இது தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டனர். கைதுக்கு பயந்த கிராம மக்கள் தலைமறைவாகினர்.
இந்நிலையில், இந்த ஓட்டுச்சாவடிக்கு நேற்று மறு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், மென்டாரே கிராமத்தை சேர்ந்த 58 பேரும்; இன்டிகநத்தா கிராமத்தில் இருந்து 13 பேர் என 71 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். இதில், 32 ஆண்கள், 39 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது 13.24 சதவீதமாகும்.
கைதுக்கு பயந்து பலரும் தலைமறைவானதால், ஓட்டு சதவீதம் குறைந்துஉள்ளது.
கிராமத்தை சேர்ந்த புட்டம்படி என்ற முதியவர் கூறுகையில், 'எப்படி இந்த மோதல் நடந்தது என்று தெரியவில்லை. ஒரு சிலரால் தான், இச்சம்பவம் நடந்துள்ளது', என்றார்.

