மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம்; நுாலகங்களில் தனி வகுப்பு ஒதுக்க உத்தரவு
மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம்; நுாலகங்களில் தனி வகுப்பு ஒதுக்க உத்தரவு
ADDED : ஆக 02, 2024 10:16 PM
பெங்களூரு : நுாலகங்களுக்கு அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு வாரம் ஒரு வகுப்பை ஒதுக்கும்படி, கர்நாடக பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்பெல்லாம் காலையில் எழுந்தவுடன் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் பலரிடையே இருந்தது. மாலைப் பொழுதிலும், விடுமுறை நாட்களிலும் ஓரளவு புத்தகங்களையும் படித்து வந்தனர். ஆனால் தற்போது புத்தகங்கள், நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை முடிவு செய்துள்ளது.
எனவே 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளிலும், வாசிப்பு பழக்கம் மற்றும் அறிவு வளர்ச்சி என்ற திட்டத்தின் கீழ், மாணவர்களை நுாலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்களை வாசிக்க செய்யும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதற்காக, வாரம் ஒரு வகுப்பு தனியாக ஒதுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்புற கதைகள், கவிதை, நகைச்சுவை, புனை கதைகள், வரலாற்று கதைகள் உட்பட மாணவர்களின் அறிவை வளர செய்யும் புத்தகங்களை படிக்க செய்யும்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசிப்பு என்பது குழந்தைகளின் சொற்களஞ்சியம், சரளமாக புரிந்துகொள்ளும் திறன், மொழி, படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
விமர்சன சிந்தனை, பகுத்தறிவு, பகுப்பாய்வு திறன், கற்பனை உள்ளிட்ட அறிவுசார் திறன்களையும் வளர்க்கிறது என்று கல்வித் துறை குறிப்பிட்டுள்ளது.
மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை, நுாலகங்களுக்கு வழங்கப்படும் ஆண்டு நிதியை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.