ADDED : ஜூலை 22, 2026 09:03 PM
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு... அடம்பிடிக்கும் எதிர்க்கட்சிகளால் அலுவல்கள் பாதிப்பு
– நமது சிறப்பு நிருபர் –: ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து பார்லி.,யில் விவாதிக்க மத்திய அரசு முன்வந்த போதும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக எந்த அலுவல்களுமின்றி முடங்கின.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, ‘நீட்’ வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, டில்லியின் ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் சில நாட்களாக போராட்டம் நடத்தினர்.
பார்லி.,யை நோக்கி பேரணி செல்ல முயன்ற அக்கட்சியினர் மீது, சமீபத்தில் பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இந்த விவகாரம் பார்லி., மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.
கடந்த 20ல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், காங்., – சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, ‘இண்டி’ கூட்டணியின் தொடர் அமளியால், முதல் இரு நாட்கள் எந்த அலுவல்களும் நடக்கவில்லை. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என, அக்கூட்டணி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், லோக்சபா நேற்று கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்., – எம்.பி., கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘‘நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். இது குறித்து விவாதிக்க நாங்கள் அளித்த ஒத்திவைப்பு தீர்மானத்தை அரசு ஏற்க வேண்டும். அதை ஏற்றால், சபை நடக்க ஒத்துழைப்பு கொடுப்போம். நாட்டின் இளைஞர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்,’’ என்றார்.
இதற்கு பதிலளித்து, பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகார அமைச்சருமான கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘‘இது குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்பதை மூன்று நாட்களாக கூறி வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் தான் காது கொடுத்து கேட்க மறுக்கின்றன. சபை விதிகளின்படி விவாதம் நடக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். எந்த விதியின் கீழ், எவ்வளவு நேரம் விவாதம் நடக்க வேண்டும் என்பதை அனைத்து கட்சி தலைவர்களுடன் பேசி சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும். நாட்டின் இளைஞர்களின் நலனை கருதி, அர்த்தமுள்ள விவாதத்தை நடத்த நாங்களும் விரும்புகிறோம்,’’ என்றார்.
லோக்சபாவில், விதி – 193-ன் கீழ் இந்த விவாதத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது, குறுகிய கால விவாதம். இதில் முறையான தீர்மானமோ அல்லது ஓட்டெடுப்போ இருக்காது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானத்தை கோருகின்றன. அதன்படி, சம்பந்தப்பட்ட அமைச்சர் சபையில் பேசி அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க வேண்டும். மேலும், இத்தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்துவதும் அடங்கும்.
ராஜ்யசபாவிலும் அமளி
எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பத்தால் ராஜ்யசபாவும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணிக்கு கூடியது. அப்போது, காங்., தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுஜ கார்கே, மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய விவகாரத்தை பேசியதும் சபையில் அமளி ஏற்பட்டது. அவரது பேச்சுக்கு ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு, எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் முழக்கங்களை எழுப்ப அலுவலகள் பாதிக்கப்பட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டது.
