ராஜினாமா செய்து போட்டியிட தயாரா? முதல்வருக்கு ஜி.டி.தேவகவுடா சவால்!
ராஜினாமா செய்து போட்டியிட தயாரா? முதல்வருக்கு ஜி.டி.தேவகவுடா சவால்!
ADDED : ஏப் 04, 2024 04:25 AM

மைசூரு : “வருணா தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, சாமுண்டீஸ்வரி தொகுதியில், என்னுடன் மோதத் தயாரா?” என, முதல்வர் சித்தராமையாவுக்கு ம.ஜ.த., மூத்த தலைவர் ஜி.டி.தேவகவுடா சவால் விடுத்துள்ளார்.
'சாமுண்டீஸ்வரி தொகுதியில், மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட ம.ஜ.த.,வின் ஜி.டி.தேவகவுடா, என்ன வெட்டி முறித்தார்' என, முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி இருந்தார்.
இவருக்கு பதிலடி கொடுத்து, ஜி.டி.தேவகவுடா, நேற்று மைசூரில் கூறியதாவது:
சித்தராமையாவுக்கு வளர்ச்சிப் பணிகள் என்றால், என்னவென்றே தெரியாது. எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யாமல், அரசியலில் முன்னேறியது அவர் மட்டுமே.
இடைத்தேர்தல்
சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு, இவர் செய்துள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். சாமுண்டீஸ்வரி தொகுதியில் 2006ல் நடந்த இடைத்தேர்தலின்போது, ம.ஜ.த.,வுக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யவில்லை.
இதனால், வெறும் 257 ஓட்டுகள் வித்தியாசத்தில் சித்தராமையா வெற்றி பெற்றார். ஆனால், 2018 சட்டசபை தேர்தலில், நான் 35,000க்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில், சித்தராமையாவை தோற்கடித்த போதும், அவர் பற்றி, குறைவாக பேசியதில்லை.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் பெயரளவில் மட்டுமே, நான் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். அனைத்தும் சித்தராமையாவின் மகன் யதீந்திரா கையில் உள்ளது. கமிஷனை, ஒப்பந்ததாரர்கள் அவரிடம் கொடுக்க வேண்டும். இத்தொகுதியில் 'கமிஷன் மாபியா' நடத்துகின்றனர். இது, 60 சதவீதம் கமிஷன் அரசு.
எதற்காக?
என்னை சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்கடிக்க, சித்தராமையா பல முறை முயற்சித்தார். என்னை காப்பாற்றுவதற்கு தெய்வம் இல்லையா, தர்மம் இல்லையா; என்னை எப்படி தோற்கடிக்க முடியும்?
சாமுண்டீஸ்வரி தொகுதியில், சித்தராமையா தோற்ற பின் அனைத்தும் முடிந்துவிட்டது. அப்படி இருக்கும்போது, என்னை பற்றி அவர் ஏன் பேச வேண்டும்? என் தொகுதியில் தாசில்தார் உட்பட அதிகாரிகள் அனைவரும் முதல்வரின் உறவினர்களே.
இவர் எத்தனை நாட்கள் முதல்வராக இருப்பார்; ஆட்சியில் இருப்பார் என்பதை பார்க்கலாம். எத்தனை வலிகளை எனக்கு கொடுக்கிறார். அவ்வப்போது என்னை பற்றி குத்தலாக பேசுகிறார்.
வருணா தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யுங்கள். நானும் சாமுண்டீஸ்வரி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன். சாமுண்டீஸ்வரி தொகுதியில், என்னுடன் மோதுங்கள்; யார் வெற்றி பெறுகின்றனர் என்பதை பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

