ADDED : செப் 13, 2024 02:09 AM

கோல்கட்டா, மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த 31 வயது பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
நாடு முழுதும் அதிர்வலைகளை எழுப்பிய இந்த விவகாரத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, பயிற்சி டாக்டர் கொலை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்க பயிற்சி டாக்டர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மாநிலம் முழுதும் சுகாதார சேவை முடங்கியுள்ளது. அவர்களுடன் பேச்சு நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மூன்றாவது முறையாக பயிற்சி டாக்டர்கள் பேச்சுக்கு அழைக்கப்பட்டனர். அப்போது, மாநிலம் முழுதும் 26 மருத்துவக் கல்லுாரிகள் உள்ளதால், அதிலிருந்து தலா ஒருவர் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கோரப்பட்டது.
இதற்கு அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து, பேச்சில் பங்கேற்க பயிற்சி டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால், நேரடி ஒளிபரப்புக்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அரசுடனான பேச்சை மீண்டும் அவர்கள் புறக்கணித்தனர்.
இதற்கிடையே, கோல்கட்டாவில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வர் மம்தா, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தார். டாக்டர்கள் தரப்பில் யாரும் வராததை அடுத்து அவர் ஏமாற்றமடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
டாக்டர்களை சந்திக்க இரண்டு மணி நேரம் காத்திருந்தோம். அவர்கள் வரவில்லை. திறந்த மனதுடன் விவாதிக்க தயாராக உள்ளோம்.
தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் காத்திருந்தும் அவர்கள் வரவில்லை. தொடர் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை.
டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியிலிருந்து விலகவும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

