மசோதாக்கள் காலாவதியாகும் காலத்தை நிர்ணயிக்க பரிந்துரை
மசோதாக்கள் காலாவதியாகும் காலத்தை நிர்ணயிக்க பரிந்துரை
ADDED : ஜூலை 18, 2024 12:14 AM

புதுடில்லி: மசோதாக்கள் அறிமுகம் செய்யும் நிலையில், அது காலாவதியாகும் காலத்தையும் நிர்ணயிக்கும் நடைமுறையை அமல்படுத்த, சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன், அமைச்சரவை கூட்டத்தின்போது, புதிய ஆட்சி அமைந்ததும், முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிடும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, சட்ட அமைச்சகம் சார்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், மிகவும் முக்கியமாக, மசோதாக்கள் காலாவதியாகும் தேதியை நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு குறிப்பிட்ட மசோதா சட்டமாகும்போது, அது எத்தனை ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதை, தொடர்புடைய அமைச்சகம் அல்லது துறையுடன் ஆலோசித்து நிர்ணயிக்க வேண்டும். இதன் வாயிலாக, நடைமுறைக்கு உகந்ததாக இல்லாத சட்டங்கள் தொடர்ந்து இருப்பதை தவிர்க்க முடியும்.
இவ்வாறு காலக்கெடு நிர்ணயிப்பதன் வாயிலாக, குறிப்பிட்ட காலத்துக்குப் பின், அந்த சட்டம் தொடர வேண்டுமா என்பதை, பார்லிமென்ட் அல்லது மாநில சட்டசபைகள் ஆய்வு செய்யலாம். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப அதில் தேவையான மாற்றங்கள் செய்ய முடியும்.