சாலை பள்ளங்கள் குறித்த பதிவு; கிருஷ்ணபைரே கவுடா விளக்கம்
சாலை பள்ளங்கள் குறித்த பதிவு; கிருஷ்ணபைரே கவுடா விளக்கம்
ADDED : ஆக 16, 2024 10:53 PM

பெங்களூரு : சாலை பள்ளங்களை மூட வேண்டும் என்று, 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்டது ஏன் என்று, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா விளக்கம் அளித்து உள்ளார்.
கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, பெங்களூரு பேட்ராயனபுரா எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவரது தொகுதிக்கு உட்பட்ட வீரண்ணபாளையாவில் இருந்து ஹெப்பால் வரை செல்லும், வெளிவட்ட சாலையின் சர்வீஸ் ரோட்டில், பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
'இந்த பள்ளத்தை மாநகராட்சி அல்லது மெட்ரோ நிர்வாகம் என யாராவது மூட நடவடிக்கை எடுங்கள்' என்று, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று முன்தினம் கிருஷ்ணபைரே கவுடா பதிவிட்டார்.
இந்த பதிவை வைத்து, சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தன. சாலை பள்ளத்தை மூடுங்கள் என்று, அதிகாரிகளிடம், அமைச்சர் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக் விமர்சித்தார். இந்நிலையில் சாலை பள்ளம் குறித்து, வலைதளத்தில் பதிவிட்டது ஏன் என்று, கிருஷ்ணபைரே கவுடா நேற்று விளக்கம் அளித்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சாலை பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி, எனது தொகுதி மக்கள் சார்பில், எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு அதிகாரிகளுக்கு நிலைமையை தெரிவிக்க முயற்சித்து உள்ளேன். அதிகாரிகள் கவனமாக பணியாற்ற வேண்டும். பிரச்னை பற்றி அதிகாரிகளுக்கு தெரிவிக்க, பல வழிகள் உள்ளன.
எனது வலைதள பதிவை திரித்து கருத்து வெளியிடுகின்றனர். அதில் அவர்களது விருப்பம். மக்கள் பிரதிநிதியாக எனது வேலையை செய்கிறேன்.
ஹெப்பால் மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணிகள் வேகமாக நடக்கின்றன. இன்னும் ஆறு முதல் ஏழு மாதங்களில், பணிகள் நிறைவு பெறும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், வாகன ஓட்டிகள் நலனுக்காக, ஹெப்பால் மேம்பாலத்தை விரிவுபடுத்தும் பணியை துவங்கினோம். பா.ஜ., ஆட்சியில் எதுவும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

